மழைத் துளிகளினூடே மின்னும் நினைவுகளாய்


மென்னிருள் கவிழ்ந்திருந்த அந்த மாலை கொஞ்சம் கூடுதல் அடர்த்தியை போர்த்திக்கொண்டிருந்தது போல இருந்தது, அன்றும் அதன் முன் தினமும் நல்ல மழை. சாலையோர வியாபாரிகளுக்குத்தான் கொஞ்சம் சவாலே என்ற போதம் சந்தோசப்படாமல் இல்லை தவிர ஏனைய எல்லோருக்கும் கூட இம்மழை மகிழ்வையே தந்தது.

முழுவதும் ஏற்றப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன், கண்ணாடிக்கு அந்தபக்கம் ஜன்னலில் அதிர்ந்து கொண்டிருந்த மழைத்துளிகளினூடே சாலையோரக் கடைகளின் வண்ண வண்ண விளக்குகள் மின்னி ஒளிர்ந்தன, நிலை கொள்ளாத நினைவு துளிகள் ஒவ்வொன்றின் பிரதிபலிப்பிலும் நீ இப்படித்தான் என் மனதிற்குள் வண்ண வண்ணமாய் மின்னிக்கொண்டிருக்கிறாய். மழை நாள் மட்டுமல்ல இம் மானுடம் உள்ளவரை இந்த பிரபஞ்சத்தின் பெரும் காதலின் பிரதிபலிப்பாய் இவ்வுணர்வு அண்டத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒரு சிறுமூலையில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.

இதோ நிகழ்வு நடக்கும் இடம் வந்து விட்டது, மழையும் சற்று ஓய்ந்துவிட்டது. வானம் அனேகமாக மேகங்கள் இன்றி தெளிவாக இருந்திருக்க வேண்டும் ஆனால் முன்னிரவு பொழுது ஆனதால் கருநீலமும் அடர் செந்நிறக் கருஞ்சாந்தும் கலந்த ஒரு ரம்மியமான வண்ணத்தில் காட்சியளித்தது வானம். காற்றில் இன்னும் ஈரப்பதம் அதிகமாகவே இருந்தது, நாம் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டு விடை பெற்ற பின் உன் இதழோரம் எஞ்சியிருக்கும் சிறு வெட்கச் சிரிப்பை போல.

அந்த நொடி வரை என்னை மழையில் நனையாமல் பார்த்துக் கொண்ட கார் அங்கே இறக்கி விட்டு சென்றுவிட்டது, குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் சுற்றுமுற்றும் பார்த்தேன் நிகழ்வு அரங்கம் திறந்து இருந்தது உள்ளே சென்று விட்டேன், அங்கே இருந்த சக மனிதர்கள் உன் நினைவுகளுக்குள் இருந்து தற்காலிகமாக வெளியே இழுத்து வந்தார்கள்.

உரையாடல்கள் உன்னதமானவை, இரண்டு தனி நபர்கள் பேசிக்கொள்வது என்றாலும் சரி அல்லது குழுவாக அமர்ந்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தை விவாதிப்பது அல்லது கலந்தாலோசிப்பது என்றாலும் சரி அனைத்து உரையாடல்களும் இரண்டு வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு பரிணாமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆனால் நம் கண்முன்னே நிகழும் ஒன்றுதான் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் சக மனிதர்களோடு பேசும் பொழுது உரையாடல் குறித்த ஒத்திகை சமகாலத்தில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது இந்த இயற்கையின் இன்றியமையாத ஒரு அற்புதமான விதியாக இருந்தாலும் நாம் யாரும் அந்தச் செயலை குறிப்பிட்டு உணர்ந்து ரசித்து பார்ப்பது இல்லை அப்படியான ஒரு ரசனையின் போது தான் உன் நினைவுகளும் என் சராசரி மனதின் உரையாடல்களும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்டன. பெரும்பாலும் அந்த ஒற்றைப் புள்ளியில் என் அத்தனை இயக்கங்களும் ஸ்தம்பித்து நின்று விட்டன இயல்பு நிலையில் இருக்க வேண்டியதன் கட்டாயம் காரணமாக மட்டுமே நான் அவ்வப்பொழுது அதிலிருந்து வெளிவந்து மீண்டும் அந்நிலைக்கு சென்று விடுகிறேன்.

ஏதேதோ கதை பேசினோம், என்ன என்னவோ உரையாடினோம், சிரித்து மகிழ்ந்தோம், கூடி உணவருந்தி கொண்டாடினோம் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே... கண்ணாடியில் இருந்து வழிந்த மழை நீரைப் போல நினைவு துளிகளின் பிரதிபலிப்புகளில் இருந்து நிஜமாகவே என் அருகாமையில் நீ வந்திருப்பதை கதவுகள் அடைக்கப்பட்ட அரங்கத்திற்குள் என்னை மட்டும் தீண்டிய தென்றல் காற்றின் மூலமாக உணர்ந்து கொண்டேன். யார் என்று தேட வைப்பதிலேயே நேரத்தை கடத்தி விடாதே என்று காதலிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன் மனம் மயக்கும் ஒரு பாடலை பாடத் துவங்கினாய் மார்கரீட்டா.

அங்கே இருக்கும் அனைவரும் ரசித்து மகிழ்வதற்காகவே பாடினாய் என்றபோதும் என் மனதிற்குள் மட்டும் நம் இருவருக்குமான உரையாடலாக அந்தப் பாடலைப் பாடினாய் என்றே நான் உணர்ந்து கொண்டேன். பின் ஒரு தருணத்தில் என் வலது பக்கம் நீ அமர்ந்து இருந்த சமயத்தில் ஓராயிரம் முறைக்கும் மேல் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன் உன் கைகளைப் பிடித்து அமர்ந்து கொள்ளலாமா என கேட்பது போல. இந்த அன்பும் காதலும் என்னுள் மட்டுமல்லாது என்னைச் சுற்றி ஏதோ ஒரு மாய வெளியை உருவாக்கிக் கொண்டிருந்தது திடீரென்று ஏற்பட்ட மின் வெட்டும் அதைத் தொடர்ந்து நிலவிய சிறு துளி அளவும் ஒளி இல்லா கதவினூடான காதலுலக பிரவேசமும் உனக்கும் எனக்கும் மட்டுமான பிரபஞ்சத்தின் பிரத்தியேக பரிசாக நான் கருதினேன்.

மின்சார இணைப்பு மீண்டும் வந்தது நிகழ்வு மெல்லமெல்ல முடிய துவங்கியிருந்தது, ஏகாந்த உணர்வின் எல்லையில்லா அழுத்தத்தின் வெளிப்பாடாய் சிறிது நேரம் நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேன்... இதயம் இடம் மாறி இருந்தது இன்பமான ஒரு வலி என் உடலெங்கும் ஏதோ செய்து கொண்டிருந்தது, நிகழ்வை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் பயணத்தை நிஜமாகவே என்னோடு பகிர்ந்து கொண்டதை என்னால் ஆச்சரியப்படாமல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொட்டும் மழை காற்றில் ஈரப்பதத்தினை விட்டு செல்வது போல அன்றைய தினம் நீ என்னை விட்டு பிரிகையில் உன் வலி மிகுந்த தருணங்களை என் நினைவுகள் கொண்டு கடப்பதாக சொல்லி, அன்பின் பெருவெளியில் என்னை ஆனந்த கூத்தாடச்செய்து...

கனவென மறைந்து சென்றாய் நீ மார்கரீட்டா நினைவு துளிகளில் பிரதிபலிக்கும் வண்ணவண்ண ஒளி மினுக்கங்களில் எண்ண மடிப்பாகவும் கருநீலமும் அடர் செந்நிற கருஞ்சாந்தும் கலந்த ரம்யமான வண்ணம் கொண்ட வானத்தில் மிக பிரகாசமான விண்மீன் ஆகவும். நினைவுத்துளிகளின் வண்ண பிரதிபலிப்புகளில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன நம் சந்திப்புகள். 

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?