பத்தரமா பாத்துக்கோங்க

     


    உங்களுக்கு ஒருவன் ஒரு புதிய இசையை அறிமுகப்படுத்தி வைக்கிறான் என்றால் அவனை ஏனைய நண்பர்களோடு சேர்த்து பத்தோடு பதினொன்றாக வைத்து விடாதீர்கள் என்று சொல்கிறது ஒரு உளவியல் சித்தாந்தம் / கோட்பாடு.


இப்படியான ஒரு கோட்பாட்டை யார் சொன்னார்கள் எதற்காக சொன்னார்கள் எந்த தருணத்தில் இதை சொன்னார்கள் என்றெல்லாம் தெரியவில்லை அல்லது இப்படி ஒரு சித்தாந்தமும் கோட்பாடும் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை ஆனாலும் இந்த சித்தாந்தம் சொல்ல வரக்கூடிய கருத்து என்பது மிக ஆழமானதாக இருப்பது போலவே எனக்கு தோன்றுகிறது.


இசை என்பது நமது நெஞ்சத்தை அறுத்தோ அல்லது பிளந்தோ செல்லாமல் நேரடியாக இதயத்தை தொடக் கூடிய ஒரு விஷயம்... இதயம் வெறுமனே ரத்தத்தை சுத்திகரிப்பு செய்கின்ற ஒரு இயந்திரம் அவ்வளவுதான் என்று சொல்லக்கூடிய நபர்கள் தம்மை சுற்றி நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படியானவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால் இசை என்பது நீங்கள் நினைக்கக் கூடிய அந்த இயந்திரத்திற்கானது அல்ல... அது மனதிற்கானது... 


மனது என்பது எங்கே இருக்கிறது இதயப்பகுதியிலா அல்லது மண்டைக்கு உள்ளிருக்கும் மூளையிலா என்பது ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சியாகவே இவ்வுலகத்திலுள்ள அதி முக்கிய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றுதான் நினைக்கிறேன். மூளையின் முக்கிய செயற்பாடாக பகுத்தறிவு இருப்பதன் காரணமாக தான் ரத்தத்தை சுத்திகரிக்கும் இதயத்தின் அருகாமையில் மனது இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். 


தன்னுடைய இருப்பிடமே சந்தேகத்துக்கு உள்ளான போதிலும் இந்த மனம் எப்பொழுதும் தான் நேசிக்கின்ற விஷயத்தையும் தன்னைச் சுற்றி உள்ள சக மனிதர்களையும் சந்தோஷமாகவும் மகிழ்வாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றது அதற்காகவே தான் அதை அறுத்தோ பிளந்தோ அல்லாமல் இசையின் ஊடாக தொட்டு வருடி காயங்களைக் ஆற்றி ஆற்றலை பெருகிட ஏதுவாக இந்த இயற்கை அமைத்துத் தந்திருக்கிறது.


இன்றைய காலகட்டங்களில் இசை மட்டும் அல்ல நல்லதொரு நகைச்சுவை, நடனம், எழுத்து என மனதைத் தொடக்கூடிய விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன என்றாலும் இசையின் இடம் என்பது இன்றியமையாததாகும்.


ஆக இப்படியானதொரு இசையை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிற நண்பன், நண்பி, காதலன், காதலியை பிரத்தியேக பட்டியலிட்டு மனதிற்குள் மிக பத்திரமாக பாதுகாப்பது தானே முறை.

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?