Dr. Padmashri. R.V.R அவர்களுக்கு பாராட்டுவிழா
எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்காக ஊரே ஒன்று கூடி விடும் என்கின்ற பெருமை கோயம்புத்தூருக்கு எப்பொழுதும் உண்டு. இதோ இந்த நிகழ்வும் அப்படியான ஒன்றாகத்தான் நிகழ்ந்தது.
சங்கரா கண் வங்கி கண் மருத்துவமனை துவக்கி சுமார் கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தின் பல்வேறு விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அத்தனை விதமான மக்களுக்கும் கண்பார்வை சம்பந்தப்பட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் மருத்துவர் திரு. ஆர்.வி. ரமணி அவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் பத்மஸ்ரீ விருது வழங்கபட்டு கௌரவிக்கப்பட்டதை வாழ்த்தவும் கொண்டாடும் விதமாகவும் கோயம்புத்தூர் மக்களாலும் கோயம்புத்தூரை சேர்ந்த 42க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்நிகழ்வை முன்னெடுத்திருந்தார்கள்.
மருத்துவரிடம் "பத்மஸ்ரீ விருது என்பது ஒருபக்கம் இருந்தாலும் அன்றாடம் இப்பணியில் உங்களை ஊக்குவிக்ககூடிய வெகுமதி என்று நீங்கள் எதை எண்ணுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு மருத்துவர் அளித்த பதில் அங்கிருந்த அத்துனை பேரின் மனதிலும் ஆக்கப்பூர்வமான ஆற்றலையும் உந்துதலையும் ஏற்படுத்தியது...!
" சில ஆண்டுகளுக்கு முன்பாக பெற்றோர் இருவரையும் இழந்த இரண்டு கண்களும் பார்வை திறனற்ற சிறுவன் ஒருவனுக்கு விழிமாற்று அறுவைசிகிச்சை செய்தேன்... இரண்டு மூன்று நாட்கள் கழித்து அந்த கட்டுகளை அவிழ்க்கும் நாளன்று அவனை சந்திக்க நான் அந்த அறையினுள் சென்றபோது அவனுடைய கட்டுகள் அவிழ்க்கபட்டு கண்களுக்கு முன்னாள் கைகளை அசைத்து பார்த்துக்கொண்டிருந்தான்... பிறவியிலிருந்தே ஒளிகளையும் அசைவையும் கண்டிராத ஒருவன் முதன் முதலாக தன் கைகளை அசைத்து அதை காணும் போது அவன் முகத்தில் வரும் ஆச்சரியமும் பூரிப்புமே என்னை தொடர்ந்து இயங்க செய்யும், என்னை முன்னகர்த்தும் ஊக்கமும் வெகுமதியும் ஆகும்"
இதுதான் முந்தைய கேள்விக்கு அவர் குறிப்பிட்ட பதில்...
நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சிந்தனையாளர் பாரதி பாஸ்கரும் இதையே குறிப்பிட்டு இந்த பத்மஸ்ரீ என்பது உங்களுக்கான அங்கீகாரம் என்பதையும் கடந்து எங்கள் இளையசமுதாயத்திற்கு சகமனிதனை பற்றிய சிந்தனைகொண்டு, தனக்கு தெரிந்த ஒன்றை தன்னால் இயன்ற ஒன்றை அதற்கு எங்கெல்லாம் தேவையுண்டோ அங்கெல்லாம் அதை கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற சிந்தனையும் செயல்பாடும் கொண்ட மனிதநேயமிக்க மாமனிதர் நாம் வாழும் இந்த சமகாலத்தில் நம்முடனே நாம் வாழும் இவ்வூரிலே இருக்கின்றார் என்பதை எடுத்துச்சொல்ல இந்த பத்மஸ்ரீ உதவுகிறது என்று பேசினார்...
அன்பு நண்பர்களே மேடையில் மேதைகள் பேசும் அத்துணை நல்ல விஷயங்களையும் நல்ல கருத்துக்களையும் அப்படியே எழுத்தில் கொண்டு வருவது என்பது மிகவும் சவால் நிறைந்த செயலாகவே இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நான் கற்று தெரிந்துகொண்டவை எண்ணற்றவை. 42 ஆண்டுகால சமூகப்பணி அதுவும் கண்பார்வை சிகிச்சை துறையில் என்பது சாதாரண விஷயம் அல்ல, பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் பல தோல்விகளும் சறுக்கல்களும் இருந்திருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு அது அத்தனையும் கடந்து இன்றைய தினம் இந்தியா முழுவதிலும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தங்களது கிளைகளை ஸ்தாபித்து மக்கள் சேவை ஆற்றி வரும் சங்கரா கண் மருத்துவ மையம் மேலும் மூன்று மாநிலங்களில் வெகு விரைவில் தங்களது சேவை பணியை துவங்க உள்ளார்கள் என்றால் இத்தகைய வளர்ச்சி வெறுமனே சொற்களால் விவரித்து விடக்கூடிய சம்பவங்களால் சாத்தியப்பட்டிருக்காது என்பதுதான் உண்மை.
ஆக இதன் பின்னால் என்ன இருக்கிறது அதாவது எத்தகைய ஆக்கபூர்வமான சக்தி இந்த செயல்பாடுகளுக்கும் இந்த மனிதர்களுக்கும் ஊக்கசக்தியாக உந்துசக்தியாக இருக்கிறது என்பதை கண்டுணரவும் கற்று தெரியவும் இது போன்ற நிகழ்வுகள் அற்புதமான களமாக விளங்குகின்றன.
நேற்றைய தினம் நிறைய ஆக்கப்பூர்வமான சக்தியையும், நிறைய நிறைய கற்றல்களையும் உள்வாங்கிகொள்ள முடிந்தது.


Comments
Post a Comment