மீள்வதென்பதும் தொலைவதே
சில ஆண்டுகளுக்கு முன்பாக யானை டாக்டர் என்கின்ற நூல் வழியாகத்தான் ஜெயமோகன் அறிமுகமானார்... அதன் பின்னர்தான் யானைடாக்டர் என்பது ஒரு தனி படைப்பு அல்ல அது அறம் என்னும் கதை தொகுப்பின் ஒரு பகுதி என தெரியவந்தது. இந்த அறம் என்னும் கதை தொகுப்பின் யானைடாக்டர் என்பது ஒரு குறுநாவல் வகையறாவில் சேர்ந்து விடக் கூடிய அளவு சற்றே தகவல்களையும் கதையாடலையும் உரையாடலையும் ஆழமாகவும் விரிவாகவும் கொண்டிருக்கக்கூடிய ஒரு புதினம் என்று சொல்லலாம்.
யானை டாக்டர் படித்துக்கொண்டிருந்த சமயம் அதிலிருந்து மீள்வதற்கு அடுத்த படைப்பை தேடிக்கொண்டிருந்தபோது கையில் சிக்கியது தான் இரவு என்னும் ஒரு நாவல்... இந்த நாவல் வாசிக்க துவங்கிய கொஞ்சம் நேரத்தில் அமானுஷ்யங்களை கதை களமாக கொண்ட புனைவோ என்று தோன்றியது ஆனால் முக்கிய கதை தொடங்கியவுடன் அது இரவோடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கின்ற ஒரு நாவல் என்று புரிந்தது... இந்த நாவலை வாசித்த பின்பு நீண்ட நாட்கள் இந்த கதை களத்தின் ஊடாகவே நான் பின்னப்பட்டு இருந்தேன் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு அடுத்தபடியாக சில பல கதைகளையும் புத்தகங்களையும் வாசித்தேன் ஆனாலும் இரவு என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. அதிலிருந்து மீள்வதற்கு அல்லது கடந்து வருவதற்கு இரவை யார் உருவாக்கினார்களோ அவர்களது எழுத்துதான் உதவும் என்ற சிந்தனை கூட எனக்கு இல்லாமல் போயிருந்தது ஏன்? என்று தெரியாமல் இருக்கிறது இன்று வரை. அச்சமயம் இரவுக்கு அடுத்தபடியாக கையில் கிடைத்தது அனல் காற்று என்னும் ஒரு நாவல்.
அனல் காற்றின் கதைக்களத்தை பற்றி விரிவாக எதுவும் சொல்வதாக இல்லை அது வாசிப்பாளர்கள் மனதை ஒரு கலைடாஸ்கோப் போல மாற்றி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்து ஒவ்வொரு கதைக்களம் கொண்டு நமது சிந்தனையை மிக அழகாக சீட்டுக் கட்டுகளை சரிப்பது போல் சரித்து விடும். ஆனால் என்னை பொறுத்தவரை இரவு நாவலிலிருந்து வெளியே வருவதற்கு அல்லது இரவு நாவலை கடந்து வருவதற்கு இந்த அனல் காற்று ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தது.
இப்பொழுது நான் அனல் காற்றில் இருந்து மீண்டு வருவதற்கு வழி தேடுகிறேன் என்று சொல்லப்போவதில்லை காரணம் அனல் காற்று என்னை அதனுள் இழுத்துக் கொள்ளவில்லை ஆனால் இரவு நாவலுக்கு உள் இருந்து என்னை வெளியே இழுத்தது. ஆனால் அனல்காற்றை வாசிக்க வாசிக்க ஐயோ இந்த கதை எப்பொழுது முடியும் என்கின்ற ஒரு மன அழுத்தமும் ஏதோ ஒருவித அசவுகரியமும் இருந்து கொண்டே இருந்தது. எத்தகைய ஒரு கொடூரமான மனஅழுத்தத்தைத் தந்தாலும் அந்த அனல்காற்றை பாதியில் விட்டு விடவும் முடியவில்லை. சரி இந்த கதை தான் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது நாம் இப்போதைக்கு இதை நிறுத்திவிட்டு மீண்டும் ஒரு முறை இரவு நாவலின் சில பகுதியை வாசித்து வருவோம் என்று யோசித்த போது அதில் சில பக்கங்களை கூட வாசிக்க விடாமல் மீண்டும் அனல் காற்று பக்கம் வந்து வாசிப்பை தொடர்ந்தது எந்த மாதிரியான விந்தை என்பதை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. எது எப்படியோ அனல் காற்று இரவு நாவலுக்குள் இருந்து நம்மை வெளியே இழுத்து வந்து விட்டது.
மிக அந்தரங்கமான இந்த இரண்டு வாசிப்புகளுக்கு பின்பு நிறைய புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், கவிதை தொகுப்புகள் என எண்ணற்ற வாசிப்பு நிகழ்ந்தது ஆனால் நம்மை முற்றிலும் கதை களத்திற்குள் தொலைத்து மீள முடியாத ஒரு சூழலுக்குள் தள்ளுவது போன்ற ஆழமான வாசிப்புகள் ஏற்படாமல் இருந்தன. அத்தகைய சூழலில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமானது விகடனின் வீரயுக நாயகன் வேள்பாரி.
பறம்பு தேசத்தில் கபிலர் தொலைந்தது போல நானும் தொலைந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பறம்பின் இயற்கை, பறம்பு மக்களின் அன்பு மற்றும் மிக முக்கியமாக வாழ்தல் என்னும் ஒவ்வொரு உயிரின் முக்கிய கொள்கை பற்றிய பறம்பு தேசத்து மக்களின் ஆழமான புரிதல் மீது எனக்கு ஏற்பட்ட தனி ஈர்ப்பு மேலும் எண்ணிலடங்கா எத்தனையோ விஷயங்கள் என்னை முழுவதுமாக பறம்பு தேசத்திலும் தொலைந்து போக செய்துவிட்டது.
இந்த பிரமிப்பிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள உதவிகரமாக இருந்தது காடு என்னும் நாவல்... ஒப்பீட்டு அளவில் பக்கங்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள், கலந்துரையாடல்கள், வசனங்கள், வர்ணனைகள் என எல்லாமே வேள்பாரியைவிட காடு நாவலில் கொஞ்சம் குறைவு தான் ஆனால் தன்னையே தொலைந்து போக செய்யும் தாக்கத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இரவு நாவலுக்குள் இருந்து என்னை அனல் காற்று நாவல் எப்படி வெளியே இழுத்ததோ அதேபோலவே வேள்பாரி நாவலில் இருந்து காடு நாவல் என்னை வெளியே இழுத்தது ஆனால் தனக்குள்ளே மிக ஆழமாக தொலைந்து போகும் படியும் செய்து விட்டது.
இன்னும் நான் பறம்பு தேசத்தில் இருந்து வெளியே வரவில்லை... காட்டுக்குள் இருந்தும் வெளியே வரவில்லை... இவை இரண்டிலிருந்தும் வெளியே வருவதற்கான வழியின் பெயர் இப்பொழுது என் கண்முன்னே என்னவென்றால் மொழிபெயர்ப்பு நூல் ஆன "வெண்ணிற இரவுகள்"
என்னது மறுபடியும் மொதல்ல இருந்தா???
Comments
Post a Comment