அன்பும் அறிவும் ஆற்றலும்
கடந்த மாதத்தின் கடைசி நாள் அதாவது பிப்ரவரி மாதம் 28ம் தேதி, சிங்காநல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய KSG கலை அறிவியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை நடத்திய தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகள் - 2019 நிகழ்வினை துவங்கி வைத்து பேச மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களையும் ஊக்குவித்து என்னையும் ஊக்குவித்துக் கொள்வதற்காக சென்றிருந்தேன், நல்லதொரு வழிகாட்டியும் ஆசிரியரும் ஆன பேராசிரியர் திரு.இரஞ்சித் அண்ணா அவர்கள் நம்மை அழைத்து செல்வது உள்ளிட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பது, ஏனைய கல்லூரிகளில் பேசி மாணவர்களை வர வைப்பது போன்ற அத்துனை பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டிருந்தார்...!
அதே சமயம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கான சிறப்பு புத்துணர்வு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு நலன்விரும்பி நல்லுள்ளம் பேராசிரியை திருமதி. மாலதி மேடம் அவர்கள் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் ஏதேனும் ஒரு தருணத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தார். மதியம் 1 மணி முதல் 2 மணிவரை உணவு இடைவெளி என்றும் அச்சமயம் அங்கு வந்தால் தன்னை மட்டும் அல்லாது தன்னைப் போன்ற சக பேராசிரியர் பெருமக்களையும் சந்திக்கலாம் என்று கூறினார்.
பிப்ரவரி 28ம் தேதி ரஞ்சித் அண்ணாவுடன் சென்று கே எஸ் ஜி கல்லூரியில் மாணவர்களோடு கலந்துரையாடிவிட்டு... கல்லூரி முதல்வர் இயக்குனர் மற்றும் சக பேராசிரியர்கள் எல்லோருடனும் பேசிவிட்டு அவர்களிடம் பல வழிகாட்டுதல்களை பெற்று அங்கிருந்து விடைபெற்று கிளம்ப யோசித்த சமயம் அதே உற்சாகத்தோடு பாரதியார் பல்கலைக்கழகம் சென்றால் என்ன என்று தோன்றியது. இவ் விருப்பத்தை சொல்லி ஒரு மணிக்கு உணவு விடுமுறையின்போது பல்கலைக்கழகத்தில் நம்மால் இருக்க முடியுமா என்ற யோசனையையும் ரஞ்சித் அண்ணாவிடம் கேட்டபோது "அதெல்லாம் போய்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று கூறி மாலதி மேடத்திற்கு போன் செய்து இவ்விடம் இப்படி ஒரு திட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது இன்னும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு ஜக்கு வந்து விடுவார் என்று அப்டேட் செய்து கொடுத்தார்.
அன்றைய தினம் பல்கலைக்கழகத்தை சென்று அடைந்து பேராசிரியை திருமதி. மாலதி மேடம் அவர்களையும் அவரது தோழமைகளையும் மகிழுந்தினுள் அமர்ந்து இருந்த படியே சந்தித்து பேசிவிட்டு அறிமுகம் செய்துகொண்டு சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அன்று இரவு தொலைபேசியில் பேசிய மேடம் "ஜக்கு நான் சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை ஒரே ஒரு குட்டி ஸ்லாட் வாங்கறேன் நாம எல்லா ப்ரொபஸர்ஸையும் சந்திச்சு ஒன்னா அவங்ககூட கலந்துரையாட ஓர் வாய்ப்பு அமையும்... உனக்கு ஓகேவா ஜக்கு?" என்று கேட்டார்... திடீரென்று நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் முன்னிலையில் கலந்துரையாடுவது என்று சொன்னவுடன் மனம் திக்கென்றது திணறியது்..! ஆனாலும் மாலதி மேடம் ஊக்கப்படுத்தி ஓகே சொல்ல வைத்து விட்டார்.
சனிக்கிழமை காலையில் மிகச்சரியாக திட்டமிட்டபடி வெங்கடேஷ் அண்ணன் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு என்னை பிக்கப் செய்ய வந்துவிட்டார். வீட்டிலிருந்து கிளம்பிய ஐந்தாவது நிமிடத்தில் சுபின் அண்ணா அழைத்து பல்கலைக்கழக வாசலில் தான் காத்திருக்கிறேன் வந்தவுடன் பிக்கப் செய்து கொள்ளவும் என்றார் ( சுபின் அண்ணா தான் முதல் தளத்திற்கு செல்ல உதவிகள் செய்தார்). பத்துக்கு இரண்டு முறைதான் திட்டமிட்டது திட்டமிட்ட படியே நடக்கிறது அதில் இதுவும் ஒன்றாக இருந்தது எல்லாமும் சரியாக நடந்து சொன்ன நேரத்திற்கு சொன்னபடி பயிற்சி நடந்த அரங்கு இருக்கும் இடத்திற்கு சென்று விட்டோம்.
நான் ஏற்கனவே கூறியது போல நூற்றுக்கணக்கான பேராசிரியப் பெருமக்கள், துறை தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் முன் என்ன பேசுவது எப்படி கலந்துரையாடுவது என்று பதற்றமான சூழலில் என்னுள்... ஆனால் மாலதி மேடமும் அன்பு மேடமும் அறிமுகம் செய்து வைத்து பேசி சூழலை இலகுவாக்கினார்கள்...
நிறைய நிறைய நல்ல விஷயங்களை பேசினோம், நிறைய நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்... பல ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு மனதில் இருந்து பதில் அளித்தோம்..! ஆசிரியர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர்களுக்குத் தேவைப்பட்டது பதில்கள் அல்ல அந்த பதில்கள் மூலமாக அவர்கள் என்மீதான புரிதலை தான் எதிர்பார்த்தார்கள். என்னை அவர்கள் அந்த குறுகிய காலத்திற்குள் புரிந்து கொள்வதற்கு அந்த பதில்கள் அவர்களுக்குப் பேருதவியாக இருந்ததை என்னால் ஆழமாக உணர முடிந்தது. அத்துணை பேரின் பாராட்டும் ஊக்குவிப்பும் என்னை இன்னும் பலமடங்கு பணிகளில் தீவிரமாக ஈடுபடுவதற்கு தேவையான ஆற்றலை தந்திருக்கிறது. நமது இணையமும் இவனும் என்னும் நூலை அத்துனை ஆசிரியர்களும் வாங்கி வாழ்த்தினார்கள்...
இந்த வாய்ப்பும், வாழ்த்துக்களும், வழிகாட்டுதல்களும் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அறிவெனும் பேரொளி அன்பெனும் தென்றலும் எங்கும் பரவிட என்னாலான எல்லா வேலைகளையும் செய்கிறேன்... இத்தனை பேரின் அன்பும் அறிவும் எனக்கு ஆற்றலை தரட்டும்...!
5/3/2019
- ஜக்கு
Excellent writeup. It is not kirukal it is your arivu thagam
ReplyDeleteExcellent bro.. Unga aatral ellarukkum therinjitae irukku. Melum athu parava. En vazhthukkal.
ReplyDelete