கோவை மினி மராத்தான் - ஒரு ஜாலி அனுபவம்

கோவையை சார்ந்த டெஃப் லீடர்ஸ் அசோசியேசனும், ரோட்டரி ஈஸ்ட் சங்கமும் சேர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மினி மாரத்தான் என்கிற நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இரண்டாம் ஆண்டு நானும் நண்பர்களும் குழுவாக கலந்து கொண்டோம். கடந்த ஆண்டு என்னால் பங்கு கொள்ள முடியவில்லை, ஆகவே இந்த ஆண்டு தவற விடக்கூடாது என்பதற்காகவே ஒரு வாரம் முன்பே நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொண்டு விட்டேன். (சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சலடி பிஜிஎம்)

பொதுவாக நான் ஊருக்குள்ளே எங்கேயேனும் பயணிப்பது என்றால் உடன்வரும் நட்பூக்கள், அண்ணன்கள் கார் வைத்திருப்பின் அவர்களோடு சென்றுவிடுவேன் அல்லது என் வீல்சேரை டிஸ்மான்டில் செய்து வைக்கும் அளவு இடவசதி உள்ள கார் ஏதேனும் புக் செய்து பயணிப்பேன். சில சமயம் காருக்கு பதிலாக ஸ்வர்கா பவுண்டேசனின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயணிக்க ஏதுவாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாரதி எனும் சிறப்பு வாகனத்திலும் செல்வேன்...

இந்த மினி மாரத்தானுக்கு சாரதியில் போலாம் என்று தோன்றியது... ஜனவரி 4 வெள்ளிக்கிழமை காலை சாரதியின் பொறுப்பாளர் ஆனந்த் அண்ணா அவர்களை அழைத்து சாரதியை புக் செய்து உறுதிபடுத்திக்கொண்டேன்...

இவற்றிற்கு இடையே பீளமேடு, ஹோப் காலேஜ் பகுதில் உள்ள க்ளஸ்டர்ஸ் மீடியா இன்ஸ்டியூட்டில் நடைபெறும் கருப்பு எனும் மேடை நாடக விழாவில் வாலண்டியராக இருப்பதால் மராத்தானை முடித்த கையோடு அங்கே போக வேண்டும், சாரதியை வெயிட்டிங்ல் போடலாமா, வேண்டாமா என்று யோசித்து. மராத்தானில் வெறும் ட்ராப் மட்டும் போதும் அங்கிருந்து பீளமேட்டிற்க்கு கால்டாக்ஸி புக் பண்ணி கொள்வோம் என்று முடிவெடுத்திருந்தேன்.

மாலை சுமார் ஆறு முப்பது மணி இருக்கும் ஸ்வர்ணலதா அக்காவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. தம்பி நாளைக்கு மராத்தானுக்கு போறீங்களா?? நானும் வரேன் ஒன்னா போலாம் என்றார்... அக்கா அங்க இருந்து பீளமேடு போகனும் என்றேன் நானே ட்ராப் பண்றேன் என்றார். மகிழ்வாக கனவுகளை தேடி உறங்கிப்போனேன்.

ஜனவரி 5, சனிக்கிழமை....

நானும், நவீனும் மராத்தான் போட்டிக்காக மும்முரமாக தயாராகிக்கொண்டிருந்தோம். இத்தகைய தீவிர தயாரிப்புகளுக்கு காரணம் போட்டியை முடித்த கையோடு ஓய்வின்றி களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய சூழல் என்பதால் கொஞ்சம் திட்டமிடலும், முன்னேற்பாடுகளும் தேவையாயிற்று. 

மராத்தான் போட்டி நடக்கும் வேளாண் பல்கலைக்கழக மைதானத்திற்குள் நுழையும்போதே ஆற்றலும் உற்சாகமும் பற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே அறிமுகமான தோழமைகள் மட்டுமின்றி நிறைய புதிய வீல்சேர் வீரர்கள் இவ்வாண்டு களமிறங்கி இருந்தனர்... கடந்த முறை நான் பங்கேற்கையில் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் யாரேனும் ஒரு வாலண்டியர் பந்தயத்தின்போது வீல்சேர் தள்ளி உதவி செய்தனர். ஆனால் இந்த ஆண்டு ஒரு சிலருக்கு மட்டுமே அத்தகைய உதவிகள் தேவைப்பட்டன மற்ற எல்லோரும் தாங்களாகவே சக்கரங்களை இழுத்துக்கொண்டு புயல் வேகத்தில் பறந்தனர். உதவிகள் தேவைபட்ட ஒருசிலரில் நானும் ஒருவன்... 

அனேகமாக அனைவருமே தங்களது சொந்த ஆற்றலில் பந்தயத்தில் ஈடுபடும்போது என்னைத் தள்ளிக்கொண்டு ஓடும் நவீன் 'அவர்களை முந்திக்கொண்டு போவது போங்காட்டமாக இருக்கும்' என்றான் எனக்கும் அப்படித்தான் தோன்றியது அதனாலேயே துவக்கத்திலேயே பின்தங்கி ஓடிவந்தோம், எங்களுக்கு முன்னால் சோர்வுற்று சக்கரத்தை தள்ள முடியாமல் தள்ளாடியவர்களை அண்ணா கமான் புல்... புல்... கமான்... என்று கத்திக்கொண்டே உற்சாகமூட்டி அவர்களோடு இணைந்து ஃபினிஸிங் லைனை அடைந்த போதுதான்... எங்களையும் அவர்களையும் தனித்தனிப் பிரிவுகளாக குறிப்பெடுத்துக் கொண்டு இருந்தனர். இத ஃபர்ஸ்ட்டே சொல்லிருந்தா முந்திட்டே வந்திருப்போமே என்று இருவரும் பிஸ்கட் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். 

விழித்திறன் முற்றிலுமாக பாதிக்கப்பட்டோர், பார்வைத் திறனில் பாதி சவாலுடையோர், கேட்கும் திறன், பேச்சுத் திறனில் சவால் உடையோர் என மற்ற பிரிவுகளுக்கு போட்டிகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. சக்கர நாற்காலியில் இருந்த நாங்கள் அனைவரும் ஏனைய நண்பர்களை சந்தித்து, உரையாடி மகிழ்ந்து, செல்ஃபி எடுத்து, சிப்ஸ் சாப்பிட்டு ஜாலி பண்ணிக்கொண்டிருந்தோம். 

நேரம் ஆக ஆக மாலை நேரம் பீளமேட்டில் நடக்கும் நிகழ்வை பற்றி மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. பரிசளிப்பு விழா முடிந்தவுடன் நாம் கிளம்புவோம் என்று ஸ்வர்ணலதா அக்கா சொல்ல மீண்டும் நண்பர்கள் கூட்டத்துக்குள் ஜாலி பண்ண சங்கமித்துவிட்டோம்...

பரிசளிப்பு நிகழ்வு முடிந்தவுடன் வாகனத்தில் ஏறியதும் பீளமேடு சென்று சேரும் வரை நாம் ஏன் படுத்துக் கொண்டு ஓய்வெடுத்தபடி வரக்கூடாது என்று தோன்றியது. ஏனெனில் நான் உடலளவில் அத்தனை சோர்வுற்று இருந்தேன்.

வண்டிதான் பிரத்தியேகமாக மாற்றுத்திறனாளிக்கு என்று வடிவமைக்கப்பட்டது ஆயிற்றே படுக்கையில் ஏறிபடுத்த உடனேயே பக்கவாட்டில் விழுந்துவிடாமல் இருக்க கைப்பிடியை ஏற்றி விட்ட சில நொடிகளில் கண்களை மூடி ஆழ்ந்து உறங்க ஆரம்பித்துவிட்டேன். பீளமேடு சென்று சேரும்வரை நான் எந்த உலகில் இருந்தேன் என்று அந்த படுக்கைக்கும், அதே படுக்கையில் என் தோள் சாய்ந்து உடன் பயணித்து வந்த இன்னும் பெயர் சூட்டுவிழா நடத்தப்படாத புதிய தோழமை பொம்மலாட்ட பொம்மைக்கும் தான் தெரியும்.

தொடர்ந்து பயணிப்போம்.
- ஜக்கு
08.01.2019

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?