பெருக்கல் கணக்கில் லவ்

பல ஆண்டுகளுக்கு முன்பாக யூடியூப் சேனல்களில் பல்வேறு பேச்சாளர்களின் காணொளிகளை தேடித்தேடி பார்த்துக் கொண்டிருந்த காலம் தமிழ் சூழலில் பேச்சாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன் அல்லது என் சிற்றறிவுக்கு எட்டியிருந்தது அவ்வளவு மட்டும்தான். பேச்சாளர்கள் என்றாலே அவர்கள் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சன் டிவியிலும் அல்லது வேறு ஏதேனும் ஒரு தொலைக்காட்சியிலும் "நடுவர் அவர்களே..." என்று பட்டிமன்றங்களிலும் அல்லது வாரம் ஒரு முறை பெரும் விளம்பர தொகுப்புகளுக்கு இடையே கொஞ்சமாக வந்து சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறேன் என்கிற பெயரில் காலம் சென்ற நடிகர்கள் போல குரல் மாற்றி பேசி சிரிக்க வைக்க முயற்சி செய்கின்ற நபர்களாகவும் தான் யோசித்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல இலக்கியம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் குழந்தைகளை நோக்கியும் இளைஞர்களை நோக்கியும் பரந்த சிந்தனைகளோடு பேசக்கூடிய பேராசிரியர்கள் சிந்தனைவாதிகள் எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இயங்கக்கூடிய தளங்கள் மட்டும்தான் பரவலான மனிதர்களுக்கு எட்டக்கூடிய இடத்தில் இல்லை என்று கூறலாம்.

இந்தக் கூற்றை மெல்ல மெல்ல மாற்ற ஒரு முயற்சியாகத்தான் புத்தகத் திருவிழாக்களில் பெருந்திரளான மக்கள் முன்பாக பல்வேறு எழுத்தாளர்களும் சிந்தனைவாதிகளும் ஆக்கப்பூர்வமான பல தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமல்லாது அந்த பேச்சை கேட்ட பின்பு அந்த கூட்டத்திலிருந்து சிலராவது கருத்துக்களில் ஏதேனும் ஒன்றையாவது தங்களது அன்றாட வாழ்வில் பின் தொடர முயற்சி செய்து அதன் மூலமாக அந்த கருத்து கொண்டிருக்கும் கருப்பொருளின் நடைமுறை வடிவத்தை சமூகத்தின் ஊடாக கண்டுவிட முயற்சியில் ஈடுபடுகின்றனர்...



அவ்வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக என் கவனத்தை ஒரு கதை சொல்லியாக ஈர்த்தவர் தான் பவா... பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் பவா ஆற்றிய உரையில் அன்றாடம் நாம் கடந்து செல்கின்ற சக மனிதர்களிடமிருந்து கதைகளையும் அந்த கதைகளினூடாக அன்றாட வாழ்வில் நாம் நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டிய அறத்தையும் நியாயத்தையும் இயல்பாக பிரதிபலிக்கும் வண்ணம் அந்த பேச்சு இருந்தது.

அதன்பின்னர் அவரது அனைத்து காணொளியையும் தேடித்தேடி கண்டேன் என்று பொய்யெல்லாம் சொல்வதாக இல்லை ஆனால் அடடே இவர் போல் இன்னும் நிறைய பேர் இருப்பார்கள் போல இருக்கிறதே என்று தேட ஆரம்பித்தேன் என்றால் அது உண்மை நிறைய பேரை தேடி கண்டேன். நான் மிகவும் நேசிக்கக்கூடிய எழுத்தாளர் சுஜாதாவின் பழைய காணொளி எல்லாம் கிடைக்கும் அளவு எனது தேடல் கடந்து சென்றது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை காரணம் நான் இக்காலத்து சராசரி மனிதர்களுள் உள்ள விரல்நுனி சோம்பேறிகளிள் முதலாமவன்.



நன்கு திட்டமிட்டு சந்தித்து நட்பு பாராட்டி நேசம் கொள்வோம் என்றெல்லாம் நாம் சிந்தித்து செயல்பட்ட போது அது எண்ணியபடி நடக்காமல் போகும், ஆனால் எதிர்பாராத ஒரு மின்னல் போல எதன்பொருட்டும் சார்ந்து இல்லாமல் ஒரு சிலர்மீது பாசம் அளவுகடந்து பாயும் இலக்கிய உலகம் இதுபோன்ற நட்புகளால் நிறைந்த ஒரு பெருங்கடல் என்றுதான் சொல்லவேண்டும். பவாவை எப்படியாவது ஏதாவது நிகழ்வில் பார்த்துவிட வேண்டும் என்கிற பரபரப்பெல்லாம் இல்லை காலம் கணிந்து நல்லதொரு சூழலில் இயல்பாக சந்திக்க வேண்டும் என்று ஒரு ஆழ்மனது ஆசை என்று சொல்லலாம்.



அப்படியான ஒரு வாய்ப்பாக எங்கள் ஊரில் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றுக்கு பவா வருகிறார் என நண்பர் ஒருவர் கூற மனம் அந்த நிகழ்வை ஒத்திகை பார்த்துக் கொள்ளத் துவங்கியது. பவாவை போன்றே முத்தரசி டீச்சரை பற்றியும் என்னுள் ஓர் அழகிய உணர்வு உண்டு இன்றைய நிகழ்வில் டீச்சரும் பேசுகிறார்கள் என்றதும் என் மகிழ்ச்சியே மகிழ்ச்சி கொண்டது. இன்றுமுதல் இதோ நானும் இருக்கிறேன் என்று வெகு இயல்பாக உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு இதயத்தோடு இணைத்துக் கொண்டிருக்கிறார் ஷைலஜா அக்கா...



பவாவை பார்த்த உடனேயே தாத்தா என்றழைத்து பேசி ஒட்டிக்கொண்டேன். முத்தரசி டீச்சரை நேரில் காணக்கிடைத்த பிரம்மிப்பை எச்சொற்க்கள் கொண்டெழுதி உணரவைப்பது என தெரியவில்லை. ஜெய் அண்ணாவும், மாலதி மேடமும் என் முகத்தின் சிறு நுணுக்கமான அசைவையும் அதன் பொருளையும் கண்டறியக்கூடியவற்கள் அவர்களிடம் நான் மெய்மறந்த நிலையில் வெளிப்படுத்திய முகப்பாவங்களை கேட்டறிய வேண்டும்... தமாசாக இருக்கும். வெஙடேஷ் அண்ணாவுக்கும், ரவிசந்திரன் அண்ணாவுக்கும் லவ் யூக்கள் பல...

இந்த முத்தத்தையும், மகிழ்வையும் பிரபஞ்சம் எங்கும் கடத்த இயற்கை பெருந்துணை புரிய வேண்டும்.

Comments

  1. மிகச் சிறப்பானதொரு எழுத்து நடை. எதார்த்த வார்த்தைகள். விரல்நுனி சோம்பல் தவிர்த்து, தொடர்ந்து எழுத விழைகிறேன் தோழமையே.

    ReplyDelete
  2. எதார்த்தமான பின்னூட்டம் தம்பி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?