மீள் - 2018
மாதம் தோறும் எப்படியேனும் எழுதிப் பதிவிட வேண்டும் என்று எண்ணிய இந்த வலைப்பூவில் ஆண்டுக்கு ஒருமுறை என்றும் எழுதி பதிவிடும் சூழலில் நான் இருக்கிறேன் என்பதை எண்ணும் பொழுது என்னுடைய சொந்த கண்ணாடி பெண்ணே என்னை காரித்துப்பி கேலி செய்யும் சுய எள்ளல் மிகுந்த ஒரு சூழலில் இருக்கிறேன் என்பதை வெட்கத்தோடு உணரும் தருணங்களில் இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் தருணமும் ஒன்று என்று சொல்லலாம்.
2019 ஜனவரி முதலாவது முடிந்தவரை மாதம் ஒருமுறை போஸ்ட் இந்த வலைப்பூவில் கட்டாயம் பதிவு செய்யப்படும் என்று நம்புகிறேன்.
இனி கடந்த ஆண்டை பற்றிய ஒரு சின்ன மீள்பார்வை.
உண்மையை கூற வேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஜூன் மாதம் வரை நடந்த எதுவும் அதாவது வாங்கிய அடிகள் எதுவும் குறிப்பிட்டு சொல்லும்படி நினைவில் இல்லை... ஆனால் ஜூன் மாதத்தில் நமது பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகமானதொரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தது அந்தக் கொண்டாட்டத்தின் நீட்சியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகான சென்னை பயணம் அமையப்பெற்றுள்ளது அந்த குறிப்பிட்ட பயணமும் மனதளவிலும் பொருளாதார அளவிலும் நமக்கு எத்தகைய சிரமமும் தராமல் கண்டு களிக்கவும் கற்று தெளியவும் ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.
எண்ணிய முடிதல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கின்ற வரிகளுக்கு ஏற்ப காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிய முடிய உள்ளம் கொள்ளும் வலிமையானது சொல்லில் அடங்க முடியாத மகிழ்வைத் தரக் கூடியது என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்த உணர்வால் உந்தப்பட்டு ஆக்கப்பூர்வமான சக்திகளின் விசையால் ஈர்க்கப்பட்டு மீண்டும் கற்றுத் தெரிந்து கொள்வதற்கும் சக எண்ணங்கள் கொண்ட மனிதர்களை சந்தித்து மகிழவும் மீண்டும் சென்னை நோக்கி ஒரு பயணம் அமைந்தது.
தொடர் பயணங்களைத் தொடர்ந்து அந்தப் பயணங்களில் வழியாக கிடைத்த வாய்ப்புகள் மற்றும் யோசனைகள் வழிமுறைகள் அனைத்தையும் நாம் மேற்கொண்டு இருக்கக்கூடிய பணிகளில் உட்புகுத்தி நமது செயல்பாடுகளை வேகத்தை கூட்டி அதற்கான நற்பலன்களை கண் முன்னே கண்டு வருகிறோம்.
ஆண்டின் நடுப்பகுதி வாக்கில் நண்பர்களுடன் உரையாடும் பொழுது டிசம்பர் மாதம் கடைபிடிக்கப்பட உள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை வெகுவிமர்சையாக பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கனவு கண்டு இருந்தோம் ஆனால் நாட்கள் நகர நகர அந்தக் கனவின் மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தவிடுபொடியாக நகர்ந்து கொண்டிருந்தது ஆனால் அத்தகைய வீழ்ச்சியில் இருந்து மீண்டு பிரம்மாண்டம் என்று சொல்லும்படி இல்லை என்றாலும் திட்டத்தை செயல்படுத்தாமல் தோற்றுவிட்டோம் என்ற சொல்லுக்கு ஆட்படாமல் வெற்றிகரமாக ஒரு சிறு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய இந்த காலமும் சூழலும் வழிவகை ஏற்படுத்திக் கொடுத்தது நண்பர்கள் சிலரின் வாயிலாக.
இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் ஜூன் மாதத்தை கடந்த பின் நாம் மேற்கொண்ட பயணங்களின் வழியாக கற்றுக் கொண்ட சில விஷயங்கள் தான் என்பது நம் நெருங்கிய வட்டம் மட்டுமே அறிந்த உண்மை.
இவ்வுலகில் ஜனரஞ்சக ஜனத்திரளில் மாற்றுத்திறனாளிகள் ஆகிய நாங்கள் ஒரு சிறு கூட்டம் தான் ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை விஷயங்கள் மட்டும் இல்லாமல் கொண்டாட்டமும் பொழுதுபோக்கும் கல்வியும் வேலையும் விளையாட்டும் பதக்கங்களும் எல்லா விஷயங்களும் எங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இனிவரும் காலங்களில் கொஞ்சம் சத்தமாக சட்டபூர்வமாக எடுத்துச்சொல்ல விழைகிறோம்.
இந்த ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் இருக்கின்றன அடுத்தாண்டு இந்த இந்த திட்டங்களை இந்த இந்த செயல்பாடுகளை இன்ன இன்ன நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டங்கள் எதுவும் பெரிதாக இப்பொழுது இல்லை தற்சமயம் மனதில் இருக்கும் ஒரே திட்டம் எந்த ஒரு விஷயத்தையும் இயல்பாக செயல்படுத்துவோம் என்பதே.
கேரளா வெள்ளப்பெருக்கு பேரிடர் ஆனது நிறைய நண்பர்களது வீடுகளை வாரி சுருட்டிக் கொண்டு போய் இருக்கிறது. கடந்து சென்ற கஜா புயலும் தன் பங்கிற்கு தமிழ்நாடு திக்குமுக்காட செய்து விட்டிருக்கிறது வரும் ஆண்டில் இந்த வெள்ளப் பெருக்காலும் புயலாலும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக நல்ல நிலைமைக்கு மீண்டு வர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு ஏனையோர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு இப்பதிவை இத்தோடு முடிக்கிறேன்.
நன்றி.
Comments
Post a Comment