இடைவெளி
மிகச்சமீப காலமாக பெரிதாக எதுவும் வாசிக்கவில்லை... கடந்த கோவை புத்தக திருவிழாவில் வாங்கிய சில புத்தகங்களின் தலைப்பை கூட மறந்துவிட்டேன். இதயம் சுருங்கி விரிந்தால் தான் இவ்வுடல் உயிர்ப்புடன் இருக்கும் அதுபோல இச்சூழலின் சுருங்கி விரிதலை ஒரு பெருமூச்சுடன் கடந்து விட முயல்கிறேன்.
இவ்வாழ்வு எப்பொழுதும் அளவுகடந்த ஓர் சுமையையே நம் மீது வைக்க முயலும். சுற்றத்தார் நம்மை அரவணைப்பதையும் அகற்றி வைப்பதையும் பொருத்தே அச்சுமையின் தாக்கமும் அதனால் உண்டாகும் வலியையும் வேதனையையும் நாம் கொள்வோம். பெரும்பாலான சுமை தான் கொண்ட நோக்கத்தை பெருவாரியாக அடைந்தே தீர்கிறது என்பது ஓர் அசைக்கவியலா உண்மை.
இம்மனித பிறப்பும், இவ்வாழ்வினையும் கொண்டாடி களிக்க வேண்டும் எனவே பல்வேறு சித்தாந்தங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் எங்கோ எப்பொழுதோ ஏற்பட்ட ஒரு சிறு பிசகில் மனிதனின் சிந்தனையில் ஏற்படுத்தப்பட்ட ஓர் பிறழ்வின் தாக்கமானது ஒரு மனிதன் தன் சகமனிதனை தனக்காக எப்படி வலைப்பது என சிந்திப்பதில் வந்து நிற்கிறது. தன் வாழ்விற்க்காக, சுய மகிழ்விற்காக, சக மனிதனையோ தன் சுற்றத்து மக்களையோ அவர்களுக்கே தெரியாமல் அவர்களது உணர்வுகளையும், உழைப்பையும் சுரண்டி எடுப்பது எத்தகைய குற்றம் என உணர முடியாத அளவு அவர்கள் மனம் கொண்ட பிறழ்வின் தாக்கம் ஆழமாக ஊடுருவியிருப்பதை நாம் இங்கே காண்கிறோம்.
என் உணர்வுகளின் வெளிப்பாட்டினால் கூட சக மனிதனின் மனம் புண்பட்டுவிடக்கூடாது என சிந்திக்கவேண்டியவனது உள்ளம் எவனுக்கு என்ன ஆனா என்ன? என் வலிதான் பெருசு... என பரந்த சிந்தனை கோட்பாட்டில் முரண்பட்டு நிற்கும் மனிதனில் தெரிகிறது. நாம் தவறவிட்ட சூழலின் இடைவெளி.
Comments
Post a Comment