கர்சீப் சொல்லும் காதல் கதை


வழிய வழிய எண்ணை பூசியாகிவிட்டது தலைக்கு அம்மாவிற்ககாக, பேருந்து நிறுத்தத்தை அடைவதற்குள் வியர்த்து வழிந்து முகமெல்லாம் எண்ணெய் பிசுக்கில் இருக்கும், நானும் அவளும் செல்லும் பேருந்து வரும்வரை பொருத்திருந்துவிட்டு பின் நண்பனின் சைக்கிள் கண்ணாடியில் முகம்பார்தப்படி பேன்ட் பாக்கெட்டில் கர்சீப்பினுள் பதுக்கிவந்த கோகுல் சாண்டாலை பூசி நிமிர சாலையோரம் ஒரு பேருந்து, அதில் ஜன்னலோரம் அவள், அவள் விழியோரம் நான்.

இரண்டு முழம் மல்லியை இரண்டு,இரண்டாக மடித்து வைத்து நடுவில் ஒரு செண்பகப்பூ வைத்தால் அழகாய் இருக்கும் கருப்பு ரிப்பன் கட்டி பின்னப்பட்ட அவளது இரட்டை ஜடைக்கு, பிறை நெற்றி நடுவே தீபச்சுடரென ஸ்டிக்கர் பொட்டின் கீழ் எப்பொழுதும் ஒரு சிறு கீற்று திருநீறு எப்பொழுதாவது சந்தனம், கண்கள் தாண்டாத கண்மை, மஞ்சளும் அல்லாது ரோஸும் அல்லாது ஒரு மங்களகரமான நீள்வட்ட முகம் அவளுடையது. அவளுக்கு மட்டும் ஒப்பனைகள் கலைவதில்லையே என்று நான் கோகுல்சாண்டால் பூசிக்கொள்ளும் போதெல்லாம் எண்ணியதுண்டு, பின் ஒரு நாள் கேண்டீனில் அவள் கர்சீப் கிடைத்தது (கிடைக்க செய்தேன்) மெல்ல பிரித்து பார்த்தேன் அதனுள் கோகுல் சாண்டாலோ, பாண்ட்ஸோ, எதையுமே அவள் வைத்திருக்கவில்லை.

அன்றொரு நாள் ஏதோ தேர்வு கல்லூரியிலேயே இருந்த பெரிய மைதானம் போன்ற ஹாலில், நாங்கள் ஆயிரத்தில் பாதி பேர் அமர்ந்திருந்தோம் மூன்றரை மணி நேரம் முடிய முப்பத்தி இரண்டு நிமிடங்கள் மீதமிருக்கையில் என் விடைத்தாளை மடித்துவிட்டு வெளிவந்து சோம்பல் முறித்தப்படி பையைத் தேடி எடுக்கையில் அவளது பையும் என் பையும் அருகருகே இருக்கக் கண்டு மெல்ல புன்னகைத்து வேகமாக ஜன்னல் வழியே உள்ளே பார்த்தேன் எழுதிக்கொண்டிருந்தாள், காத்துக்கொண்டிருந்தேன் மூன்றரை மணிநேரம் முடிந்தும் இரண்டு நிமிடம் கழித்தே வர அவளது பையை நீட்டினேன் வாங்கிய கை வியர்த்திருந்தது மெல்ல உடன் நடந்து காண்டீன் சென்று காற்றாடிக்கு கீழ் அமர கரண்ட் இல்லை என்று மாஸ்டர் சொன்னார், கர்சீப் கொஞ்சம் நேரம் விசிரியாகியது ஆரஞ்சு பழரசத்தை அவள் குடிக்க குடிக்க நெற்றியில் துவங்கி காதோரமாக கன்னத்தில் மெல்ல வழிந்தது நவரசம். அன்று கண்டுகொண்டேன் அவள் மெழுகு சிலையில்லையென.

அடுத்தநாள் காலை அளவாய் எண்ணெய் தேய்த்து அம்மா கையால் திருநீறிட்டு பேருந்துநிறுத்தம் சென்றேன், நண்பனின் சைக்கிள் கண்ணாடி தேவைப்படவில்லை எங்கள் பேருந்து வர ஜன்னலோரம் விழிகள் சந்தித்தப்போது இதழ்களும் பரஸ்ப்பரம் புன்னகைத்துக்கொண்டன, மதியம் சாப்பிடும் முன் கை கழுவினேன் அவள் கர்சீப் கொடுத்தாள்.
                                                                                  -ஜக்கு (எ) ஜெகதீஷ்

                            

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?