அவள் என்றொரு மதம் -Sarvs Saga

'அ...'

முதல் எழுத்தை தொடங்கவிட்டேன்.

ஆனால் அப்பாவிடமோ அம்மாவிடமோ என் அழுகையை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எனினும் அழுவதற்கு, சோகத்தை யாருடனேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.

சோகத்தை பகிர்ந்து கொள்ள என்னை நன்கு புரிந்துகொண்ட நபர் எவரும் உடன் இல்லை. அழுவதற்கு ஆசையாய் உள்ளதற்கு நெஞ்சில் இருக்கும் சோகத்தில் பாதியேனும் அழுகையோடு கரையட்டுமே என்பது தான் என்னை பொருத்தமட்டில் காரணம் ஆகும்.

கடைசியில் பகிர்ந்து கொள்ள நபரை தேர்ந்தெடுத்த பின், எழுத துவங்கினேன்.

'அன்புள்ள எனக்கு. . .'

எனக்கு நானே கடிதம் எழுதுவது முட்டாள்த்தனமாய் பட்டது. மற்றும், என்னிடம் பகிர்ந்து கொண்டால் அழுகை வருமா என்பதும் சரியாய் தெரியவில்லை. ஆனால் கடிதம் எழுதினால் மனதின் வலி குறையும் என அறிந்திருப்பதால் இந்த முடிவு.

சரி என ஒரு மனதாய் முடிவு செய்து கடிதத்தை தொடர்ந்தேன்.

'அன்று...'

கடிதத்தில் எழுதும் முன்பு ஒருமுறை மனதில் நிகழ்வுகளை அசைபோட்டு பார்க்க நினைத்தேன்.

அன்று தான் அவளைக் கண்டேன். ஆம், இது அவளைப் பற்றிய கடிதம் தான்.

சில சமயங்களில் ஓவியம் உயிர் பெற்று வருவதுண்டு, உயிரை பெற்று செல்லவும் வருவதுண்டு. அவள் இரண்டாம் ரகம்.

உயிரை பெற்றுச் செல்ல வந்திருந்த ஓவியம் அவள்.

ஞாயிற்றுக் கிழமையின் உதயத்தில் பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக மட்டுமே காத்திருந்தேன். அதிர்ச்சி தரும் வகையில் கண்முன் நிகழ்ந்தது அந்த பெரும் விபத்து.

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது போல் ஒரு அலறல் சத்தம். சரியாய் பராமரிக்கப்படாத பேருந்து தான் அத்தனைக்கும் காரணம்.

யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லையென நினைக்கிறேன். பேருந்து நிறுத்தத்தில் என்னையும் ஓவியத்தையும் தவிர வேறு எவரும் இல்லை.

அவள் நிற்பதை விடுத்து, உலகெனும் கிரகத்துள் வந்த பின் தான் விபத்தே நிகழாததை உணர்ந்தேன்.

என் உயிர் வாங்கும் ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த நிமிடத்தில், நிறுத்தத்திற்கு அலறல் சத்தத்தோடு வந்து தரையிறங்கிய பேருந்தினை விபத்தின் காரணியாக சோடித்த மனதினை நினைத்து புன்னகைத்தேன்.

மனதின் அறியாமையை நினைத்து புன்னகைக்கையில் தான் உணர்ந்தேன், நான் செல்ல வேண்டிய பேருந்து தான் அலறியபடி நிறுத்தத்தை கடந்து சென்றது என்று. என் அறியாமையை நினைத்து மனம் புன்னகைத்தது.

"பேருந்தை தான் தவர விட்டேன். ஓவியத்தை அல்ல. சிரிப்பதை நிறுத்து" மனதினை கடிந்தபடி அவளை பின்தொடர முற்பட்டேன்.

அவளை ஏன் பின்தொடர்ந்தேன் என்பது நினைவில் இல்லை. என் ஓவியம் முன்னே செல்கிறாள் எனும் காரணம் போதாதா பின்தொடர?

காரணம் நினைவில் இல்லையெனில் அவளை வர்ணித்து மழுப்பலாம் என நான் நினைப்பது உண்மை தான். எனினும் மறப்பது மட்டும் நிலைத்த என் நினைவில் நீங்காது நின்ற சொற்ப தகவல்களில் பெரும்பான்மை அவளைப் பற்றியது தான் என்பதும் உண்மை.

அவளினை போன்றதொரு கவிதையை நான் அன்று முதல் கண்டதில்லை.

காதலியிடம் பெரும்பாண்மை ஆண்கள் மிகைப்படுத்தி கூறும் வசனம் இது என்ற போதிலும், நான் இவ்வாறு கூறக் காரணம் அவளைப் போல் ஒரு அழகியை காணாததாகவும், ஒருவேளை கண்டிருப்பின் அவளோடு ஒப்பிட விரும்பாததாகவும் இருக்கலாம்.

நிற்க. .

நான் அவளைப் பின்தொடர்கிறேன். அதன் பின்?

அவள் மெதுவாய் நடந்து செல்கிறாள். ஆச்சரியக்குறியில், கோட்டின் கீழிருக்கும் புள்ளியைப் போல அவ்வளவு அழகாய் அடியெடுத்து வைத்து.

இப்படியாக ஒவ்வொரு நொடியையும் ரசித்து கடந்த இனிமையான பயணத்தின் நடுவே கேள்விகளில் எனைக் கொன்றது மனம்.

நெஞ்சில் படபடத்தது. அவள் யாரையேனும் காதலித்துக் கொண்டிருந்தால்?

கேள்வியின் விடை ஆம் எனில் ?

ஆம் எனில் என்ன செய்வது? கற்பனை செய்யவும் இயலாத பதில் கொண்ட கேள்விகளை வரிசையாய் தொடுத்தது.

அந்நேரம் அவளை அணைத்து அழ வேண்டும் போலிருந்தது. நிமிடங்களின் முன் சந்தித்தவளால் என் சிந்தை முடங்கியது. செய்வதறியாது திணறி நின்றேன்.

என் காலடி ஓசை தொடராததை வைத்து நான் நின்றதை உணர்ந்திருப்பாள் போலும்.

சற்றே பயந்தபடி திரும்பி என்னைப் பார்த்த அந்த நொடியில் மனம் எழுப்பிய கேள்விகள் உடைந்தன. எனைக் குழப்ப மனம் தீட்டிய சதி அற்பமாய் பட்டது.

பயம் கலந்த காதலோடு கண்ட அவள் விழிகளின் இயக்கம் கண்டு நொறுங்கிப் போனேன். அவள் புருவங்களின் நடுவே இருந்த இடைவெளியை முத்தம் கொண்டு நிறைத்திடலாமெனவும் நினைத்தேன்.

திரும்பி என்னைக் கண்டவள் அருகே வந்தாள்.

உள்ளுக்குள் பதற்றம் அலையடித்தது. ஒருவேளை அவள் பேச வந்தால் பதிலுக்கு எந்த மொழியில் பேச, என்றெல்லாம் சிந்தனை விரைந்து பயணித்தது.

அவள் என்னை நோக்கி வருவதற்கு அடியெடுத்து வைத்த போதே கால்கள் ஆட்டம் போடத் தொடங்கின. கவிதை சொல்லும் கம்பீரம் எல்லாம் காகிதத்தில் மட்டும் தான். தித்திக்கும் தமிழ் திக்கித் தொலைக்காமல் இருந்தால் பூர்வ பிறப்பின் புண்ணியம்.

இன்னும் ஓரிரு நொடிகள் தான். உலகம் அழியப் போவதில்லை என்ற போதிலும் அவள் காதலை சொன்னால், அழிந்தாலும் அழியக் கூடும். பேசுவாளா? எனும் கேள்வி கேட்ட மனதினை தள்ளி வைத்துவிட்டு, காதலை சொல்லி விடுவாளா இல்லையா என எண்ணுவது முட்டாள்தனம் என்றாலும், அவள் எனக்கானவள் எனும் நம்பிக்கை தான் காதலை சொல்லி விடுவாளா எனும் கேள்வி.

அவளுக்காக காத்திருக்கிறேன், ஆனால் விழி அவளற்ற திசை தேடி ஓடும் செயல் நகைப்புக்குரியது.

இப்படியாக எண்ணம் ஓடிக் கொண்டிருக்கையில், அவள் இரண்டாம் அடியெடுத்து வைத்திருந்தாள். காலம் தான் எவ்வளவு விந்தையானது. . . ரசிக்கும் பொழுதினில் காற்றாகவும், தவிக்கும் தருணத்தில் தவமாகவும் கடக்கின்றது.

நொடி ஒவ்வொன்றையும் கஷ்டப்பட்டு நகர்த்தி, அவள் பேசுவதற்கு அருகில் வந்த நொடியை அடைந்ததேன்.

"இங்க செயின்ட் லூயிஸ் சர்ச் எங்கே இருக்குன்னு தெரியுமா? நான் ஊருக்கு புதுசு. பக்கத்துல இருக்குனா கொஞ்சம் கூட்டிட்டு போய் விடுறீங்களா ப்ளீஸ்?", அவள் கேட்டதும் 'மறந்துடுச்சுன்னு சொல்லுடா.. ஹா ஹா' மனம் எள்ளி நகையாடியது.

இடம் தெரிந்திருந்த போதிலும், அவளிடம் பதில் கூற மொழி நினைவில் இல்லை. "சரிங்க" என்பதைப் போல் தலையசைத்தேன்.

அவளோடு நடந்து செல்லத் துவங்கினேன். மிகவும் அழகிய நொடி அது. இரண்டாம் அடியெடுத்து வைக்கும் முன்பே சர்ச் மணி செவிட்டில் அறைந்து எழுப்பியது. காலம் தான் எவ்வளவு விந்தையானது. நொடியில் சர்ச்சை வந்தடைந்திருந்தோம்.

"ரொம்ப தேங்க்ஸ்ங்க", கூறியபடி ஆலயத்திற்குள் சென்றாள்.

'கடவுளையும் மதத்தையும் நம்பாதவனுக்கு கோயில்ல என்ன வேலை?', சில நேரங்களில் மனம் செருப்பால் அடிக்கிறது. ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் அவள் அருகே அமர்ந்து கர்த்தரிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்,'கர்த்தரே நீங்க இல்லைனு தெரியாம அவ நம்பிக்கையோட வேண்டிகிட்டு இருக்கா. அதுக்காகவாவது நீங்க இருக்கணும்னு வேண்டிக்கிறேன்'.

அவள் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டு வேண்டும் அழகைப் பார்க்கவாவது இனி செயின்ட் லூயிஸ் சர்ச்சுக்கு வர முடிவு செய்தேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு அவள் புன்னகைத்தபடி எழுந்து சென்றாள்.

அவளைக் காண அடுத்த வாரமும் அங்கு சென்றேன். அதன்பின் பல முறை தொடர்ந்து சென்றேன்.

அத்தனை முறை சென்ற போதிலும், முன்பே குறிப்பிட்டது போல் 'அவளினை போன்றதொரு கவிதையை நான் அன்று முதல் கண்டதில்லை'. ஆம். அவளை அன்று முதல் காண முடியவில்லை.

வாரந்தோறும் சர்ச்சிற்கு வருகிறேன். நான் சர்ச்சிற்கு வருவதால் மதத்தின் மேல் நம்பிக்கை கொண்டுவிட்டேன் எனில், நான் பின்பற்றும் மதம் அவளெனக் கொள்க.



ஒரு வழியாய் மொத்த நிகழ்வையும் மனதில் ஓட்டிப் பார்த்த பின்பு தான் கடிதத்தில் எதையும் எழுதாததை உணர்ந்தேன். மனதில் அவளின் நினைவைப் போல், பேனா அலகில் மை உறைந்து போயிருந்தது. சோகத்தை மறந்து அவளை நினைத்து புன்னகைத்தேன்.

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?