சிவ. விஜய பாரதி - கவிதைகள்

கருகும் இளமை :

அடர்ந்த பனிமூட்டம்
குளிர்ந்த காற்று
சன்னலினுள் நுழைந்து
குளிராய் என்னைத் தாக்க
எதிர்கொள்ள இயலாத
என் உடல்
சிலிர்த்து போனது

நெடுநேர
கண் விழிப்பில்
புரண்டு புரண்டு நான்

மரக்கிளையில் அமர்ந்த
ஆந்தையின் அலறலாய்
காமத்தீ எனக்குள்

கோட்டான் சத்தம்
குழந்தைக்கு ஆகாதென
விரட்டும் வயோதிக மனமாய்
விரட்டுகிறேன்

கிளைவிட்டு
கிளை தாவி
மீண்டும் அமர்கிறது

இறந்து போன
கணவனைத் தேடும்
என் இளமையை
கருக்கிக் கொள்கிறேன்
குழந்தைகளுக்காக

சமூக சடங்குகளால்
கட்டப்பட்ட
என் மனக் கிடங்கின் அழுகை
யாருக்குக் கேட்கும்.
           
வளமான ஏழ்மை

பகலை இருளாக்கிய மேகம்
நீர்க்காடென
மழையைக் கொட்டுகையில்
காற்றோடு கை கோர்த்து
உடலில் பரப்பும் குளிரை
ரசிக்க முடிவதில்லை
ஒழுகும் ஓட்டை குடிசைக்குள்.

இரவும் இவனும் 

தூக்கம் தொலைத்த இரவுகளில்
கொசுக்கடியினூடே
கொத்தித் தின்றது தனிமை

போர்வைக்குள்
நுழைத்துக் கொண்ட உடலை
புழுக்கம் போர்த்தியிருப்பது போல
மனசை அப்பிக் கிடந்தது
திமிறிக் கொண்டிருக்கும் இளமை

காதறுந்த செருப்பைப் போல
துணையற்ற வாழ்க்கை நீருக்குள்
காமம் கல்லெறிய
நீரைச் சுமந்த அலைகள்
கரைகளை மோதி மோதி
அமிழ்ந்து போனது.

சன்னலின் வழி
நிலவு எரித்துக் கிடந்தது

விலையுள்ள வியர்வை 

அதிகாலை பொழுது

வாகன நெரிசலற்ற
நெடுஞ்சாலை

உழைக்க மறந்து
ஊதிப் பெருத்த
பெருச்சாலிகள் சில

நடந்து கொண்டிருந்தது
வியர்வைக்காக.

பூவரசனும் புவியரசனும் 

புரியாத பெருநகரச் சாலையொன்றில்
பரிச்சயமற்ற முகங்கள்
விரைந்து கொண்டிருக்க

பூவரசம் பூக்கள்
உதிர்ந்து கிடந்த
பழைய மரத்தினடியில் நின்றேன்

மழைத் தூவி கொண்டிருந்தது
இருவர் முகத்திலும்.

மந்திரிச்ச கயிறு 

குறும்பு பண்ணாம எழுதணும்
விளையாட்ட குறைச்சு
நல்லா படிக்கணும்
அப்போதான்
பெரிய டாக்டரா ஆகலாம்

தம்பிக்கு
மூனு நாளா
காய்ச்சல் நிக்கல
சாமியார்ட்ட மந்திருச்சு
கயிறு கட்டி வரேன்
சமத்தா படிச்சிட்டிரு

சொன்ன அப்பாவிடம் கேட்டான்

"கயிறு மந்திரிக்க படிக்கட்டா அப்பா? !"

Comments

Popular posts from this blog

உன்னாலே உன்னாலே!!

பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்

இட்லியை எஞ்ஜாய் செய்வது எப்படி ?