இதுவும் காதலே
கிடைக்காத ஒன்றின் மீதே இந்த மனது ஆசை வைக்கும் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை.
என் ஆசை இன்னும் சற்று ஆழமானது , கண்களுக்கு எட்டியது கைகளுக்கு எட்டாது போனால் அதன் வேதனை சொல்லில் அடங்காது.
என்ன பிழை செய்துவிட்டேன் என்று தெரியவில்லை
இந்த இயற்கை என்னை ஏனோ ஒதுக்கி விட்டது...
பள்ளி விட்டு வீடு திரும்புகையில் ஒரு நாள் மழையில் நினைந்தேன் , அதன் பின் இன்றுவரை எந்த மழையும் என்னை தீண்டியதில்லை , செயற்கையின் சிறையில் , ஓர் தனி அறையில் , அடைபட்டு கிடக்கும் என்னை தேடி வரும் அடைமழையின் ஓசை இயற்கையின் ஒப்பாரியாகவே ஒலிக்கிறது இன்றும் என் ஜன்னல் ஓரத்தில் .
பல் துலக்கும் இடத்திலிருந்து பத்து அடி தள்ளி பளிச்சென்று பூத்து என்னை பார்த்து சிரிக்கும் பூவின் மென்மையை உணர ஆசை பட்டு இன்றுவரை ஏக்கமாகவே எஞ்சி இருக்கிறது என்னுள் ,
எல்லோருக்கும் குறிஞ்சி மலர் அதிசயம்
ஆனால்
தினம் பூத்து தினம் உதிரும் மலரோடு
உதிர்ந்த பூவும்,
உலர்ந்த இதழ்களும் கூட எனக்கு அதிசயமே .
விவரம் தெரிந்த அன்று முதல் இன்னும் என் பாதங்கள் பூமாதேவியின் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை,
பூமியை அணைப்பதுபோல் ஒருநாளும் விழுந்ததில்லை,
பூமியின் முத்தச்சுவடாய் ஒரு சிறு தழும்பு கூட என் மீது இல்லை ,
வானம் மறைத்த திரையில் தொங்கிகொண்டிருக்கும் மின்விசிறியின் செயற்கையான காற்றில் என்னை தேடி வந்த தென்றலை எத்தனை முறை தொலைத்திருப்பேன் என்றெண்ணுகையில் தென்றலும் தீ என மாறுகிறது என் சிந்தையில்
என் கற்பனையில் பிறந்து , கவிகளில் தவழும் நிலவை ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்தஞாபகம் ,
குளிரும் இரவில்,
ஈரமான பணியில், இதமாய் படுத்து
நிலவையும்,நட்சத்திரங்களையும் ரசிப்பது எப்போது?
இயற்கையின் பதிவேட்டில்,
என் முகம் இருக்க வாய்ப்பில்லை
மின்னலின் ஒளியில் நான்
படம் பிடித்து கொள்ளவில்லையே
மழை,தென்றல்,பூ,நிலா இவை மட்டும்தானா , இல்லை...
இன்னும் எண்ணற்ற விஷயங்களில் இயற்கை என்னிடம் இருந்து விலகியே இருக்கிறது , கோபித்து கொண்ட காதலி போல் கண்ணெதிரே இருந்தும் கைக்கு எட்டாதவளாய்
இறந்த பின்னேனும் என்னை இயற்கையாய் எரிக்கவோ,புதைக்கவோ செய்திடுங்கள் அங்கும் வேண்டாம் செயற்கையான எலக்ட்ரிக் சுடுகாடு.
நண்பா நீ ஏன் வருத்தப்படுகிறாய் செயற்கையின் சிறையில் மட்டுமே நீ இருக்கிறாய் என்று.சற்று ஆழமாக சிந்தித்துப் பார்..உன்னைச் சுற்றி இருப்பவை எல்லாமே இயற்கையின் வரப்பிரசாதம் தான்.இயற்க்கை உன்னை ஒதுக்க வில்லை செயற்கைதான் உன்னை ஒடுக்கியது. ஓர் தனி அறையில் , அடைபட்டு கிடக்கும் உன்னைத்தேடி வரும் அடைமழையின் ஓசை இயற்கையின் ஒப்பாரியாகவே ஒலிக்கிறது..ஆனால் செயற்கையான அழை பேசியின் ஓசை என்றுமே உனக்கு ஒப்பாரியாக இருப்பதில்லை. இயற்கையின் பதிவேட்டில்,
ReplyDeleteஉன் முகம் இருக்க வாய்ப்பில்லை ஆனால் செயற்கையின் பதிவேட்டில் உன் முகம் என்றுமே இருக்கிறது . அதற்காக இயற்க்கைக்கு செயற்கை எதிரி இல்லை என்று நான் சொல்லவில்லை.. மாற்றங்களை உனக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள் அதிலும் சந்தோசம் காண்பாய். இது உன் மனதை ஆறுதல் படுத்த அல்ல என்னால் இயன்ற பதிவு..இப்படிக்கு நண்பன்.
Dear Jagu,
ReplyDeletewonderful. We were not able to understand the nature but you have!!!!
அருமையான மொழிநடை, வலி மிகுந்த வார்த்தைகள். ஒவ்வொரு வரியும் ஏக்கமும், ஆழமான உணர்வுமாய் படிக்கும் போதே மனதைக் கனக்கச் செய்துவிட்டது, கவலைப் படாதே என்று ஆறுதல் சொல்லக் கூட தயங்க வைக்கிறது. ஆனாலும் சொல்கிறேன்.....இயற்கையை நேசித்துக் கொண்டே இரு. உன் ஸ்வாசம் என்பது இயற்கை. உன் அன்பை உள் முகமாய் திருப்பு இந்த பிரபஞ்சமே உன்னுள் தான் இயங்கிக் கொண்டிருப்பதை உணர்வாய். Keep writing. you have an excellent word power ma..
ReplyDelete